5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள்; டிஜிட்டல் மயமாக்கலால் கண்டுபிடிப்பு
5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள்; டிஜிட்டல் மயமாக்கலால் கண்டுபிடிப்பு
UPDATED : நவ 21, 2024 04:43 AM
ADDED : நவ 21, 2024 12:59 AM

புதுடில்லி, ரேஷன் எனப்படும் பொது வினியோக முறையில், 'டிஜிட்டல்' மயமாக்கும் நடவடிக்கைகளால், 5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ரேஷன் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்குவது, வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவது, வினியோக நடைமுறையை திறம்பட கையாள்வது போன்றவற்றில் மத்திய அரசு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் வாயிலாக, ரேஷன் பலன்கள் உரியவர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
நாடு முழுதும் தற்போது, 20.4 கோடி குடும்பத்தாரிடம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் வாயிலாக, 80.6 கோடி பேர் பயன் பெறுகின்றனர்.
இதில், 99.8 சதவீத ரேஷன் கார்டுகள் இ - கே.ஒய்.சி., எனப்படும் மின்னணு தகவல் முறையில் சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும், 98.7 சதவீத பயனாளர்கள், ஆதார் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டுள்ளனர்.
இதன் வாயிலாக, 5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுதும், 5.33 லட்சம் பி.ஓ.எஸ்., எனப்படும் பாயின்ட் ஆப் சேல்ஸ் என்றழைக்கப்படும் கருவியின் வாயிலாக, ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.
இதன் வாயிலாக, தகுதி வாய்ந்த நபர்களுக்கே ரேஷன் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.