5வது முறை எம்.பி., ஆவேன் பா.ஜ., சித்தேஸ்வர் நம்பிக்கை
5வது முறை எம்.பி., ஆவேன் பா.ஜ., சித்தேஸ்வர் நம்பிக்கை
ADDED : பிப் 22, 2024 07:03 AM

தாவணகெரே: “தாவணகெரே லோக்சபா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு, ஐந்தாவது முறையாக எம்.பி., ஆவேன்,” என, பா.ஜ.,வின் சித்தேஸ்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தாவணகெரே தொகுதி பா.ஜ., - எம்.பி., சித்தேஸ்வர், 71. தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், சித்தேஸ்வருக்கு 'சீட்' வழங்க, தாவணகெரே பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா, முன்னாள் எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா மகன் மாடால் மல்லிகார்ஜுன் உட்பட சிலர் சீட் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தாவணகெரேயில் சித்தேஸ்வர் நேற்று அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில், தாவணகெரே தொகுதி சீட் எனக்கே மீண்டும் கிடைக்கும். ஐந்தாவது முறை எம்.பி., ஆவேன். இம்முறை சீட்டுக்கு ஆசைப்படுபவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அதுபற்றி எனக்கு கவலை இல்லை.
ஒவ்வொரு தேர்தலின்போதும், சித்தேஸ்வர் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்று, தாவணகெரே மக்களிடம், காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்வர்.
ஆனால் இம்முறை பா.ஜ., தலைவர்கள் சிலரே, எனக்கு எதிராக பேசி வருகின்றனர். என் அப்பா எம்.பி.,யாக இருந்தவர். நானும் எம்.பி.,யாக இருந்து உள்ளேன். வரும் காலத்தில், எனது மகனும் எம்.பி., ஆகலாம். பா.ஜ., கூட்டத்தில் கலந்து கொள்ள, டில்லி சென்றேன். எனக்கு சீட் கொடுங்கள் என்று, மேலிட தலைவர்களை சந்தித்து கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.