ADDED : மே 31, 2024 05:03 PM

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ம.ஜ.த., எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா,33. ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், சில பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்து இருந்ததாகவும் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஏப்.,26ல் அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணா, நேற்று( மே 30) நள்ளிரவு பெங்களூரு விமான நிலையம் வந்திறங்கினார். அங்கு அவரை எஸ்ஐடி போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிறப்பு புலனாய்வு குழுவினர், 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். 6 நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, ஜூன் 6ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.