ADDED : அக் 20, 2024 12:13 AM
பங்கா: பீஹாரில் கன்வாரி யாத்ரீகர்கள் மீது சொகுசு கார் மோதியதில், ஆறு பேர் உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் சிவபெருமானை வழிபடுவதற்காக யாத்திரை செல்லும் பக்தர்களை கன்வாரி என அழைப்பர். இவர்கள் விரதமிருந்து, ஹரித்துவார், கங்கோத்ரி போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை செல்வர்; அங்கிருந்து கங்கை நீரை சேகரித்து, அதை தங்கள் ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
இதன்படி, பீஹாரின் சுல்தான்கஞ்ச் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் இருந்து நீரை சேகரித்து சென்ற கன்வாரிகள் குழுவினர், கவுர்நாத் பகுதியில் உள்ள மஹாதேவ கோவிலில் வழிபட நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது, அவ்வழியாக வேகமாகச் சென்ற சொகுசு கார், சாலையோரம் சென்ற கன்வாரிகள் குழு மீது மோதிவிட்டு சென்றது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்; எட்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.