ADDED : ஜூலை 20, 2025 03:24 AM
மதுரா: உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஹர்லால்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர், 55. இனிப்பு கடை நடத்தி வந்தார்.
இவர், தன் குடும்பத்தினர் மற்றும் மத்திய பிரதேசத்தின் மோரேனா பகுதியைச் சேர்ந்த அவரது மருமகன்கள் உள்ளிட்டோருடன், மினி வேனில், யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது டிரைவர் திடீரென கண் அயர்ந்ததால், முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி முற்றிலுமாக நொறுங்கியது.
அதில் சென்ற தரம்வீர், அவரது மகன்கள் ரோஹித், 20, ஆர்யன், 16, மற்றும் மருமகன்கள் தல்வீர், 26, பர்த் சிங் 22, மற்றும் அமேதியை சேர்ந்த துஷ்யந்த், 22, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தரம்வீரின் மனைவி சோனி, 55, அவரது மகள் பாயல், 18, படுகாயம் அடைந்தனர். பலியான ஆறு பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.