கல் குவாரியில் பாறை சரிந்து உத்தர பிரதேசத்தில் 6 பேர் பலி
கல் குவாரியில் பாறை சரிந்து உத்தர பிரதேசத்தில் 6 பேர் பலி
ADDED : நவ 18, 2025 07:05 AM

சோன்பத்ரா: உத்தர பிரதேசத்தில், சட்டவிரோதமாக இயங்கிய கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 6 ஆக அதிகரித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், சட்டவிரோதமாக கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 15ம் தேதி பணியாற்றி வந்தனர்.
அப்போது, குவாரியின் மேலடுக்கில் இருந்த பெரிய பாறைகளில் துளையிடும் பணியின்போது, எதிர்பாராதவிதமாக விரிசல் ஏற்பட்டு, சரிந்து விழுந்தது.
இதில், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பலர் புதைந்தனர்.
தகவலறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், கல் குவாரியில் சிக்கிய தொழிலாளி ஒருவரின் உடலை மீட்டனர். பலியானவர் பனாரியைச் சேர்ந்த ராஜூ சிங், 30, என தெரிய வந்தது.
இதற்கிடையே, மாநில அமைச்சரும் அத்தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சஞ்சீவ் குமார் நேரில் சென்று பார்வையிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, மற்றவர்களை மீட்கும் பணிகள் வேகமெடுத்தன.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களில் இந்திரஜித், 30, அவரது சகோதரர் சந்தோஷ் யாதவ், 30, ரவீந்திரா, 18, ராம்கேலவன், 32 மற்றும் கிருபாசங்கர் ஆகிய ஐந்து தொழிலாளர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இவர்கள் அனை வரும் பனாரியை சேர்ந்தவர்கள்.
இதன் காரணமாக பலி எண்ணிக்கை, 6 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

