ஹிமாச்சலில் 500 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்தது: ஆசிரியர் குடும்பம் உள்பட 6 பேர் பலி
ஹிமாச்சலில் 500 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்தது: ஆசிரியர் குடும்பம் உள்பட 6 பேர் பலி
ADDED : ஆக 09, 2025 11:37 AM

சம்பா: ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 500 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பானிகேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். புல்வாஸ் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அதே பள்ளியில் அவரின் குழந்தைகளும் படிக்கின்றனர்.
ரக்ஷா பந்தனை கொண்டாடுவதற்காக இவர் தமது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தமது குடும்பத்துடன் புல்வாசில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
நேற்று நள்ளிரவில் அவர்கள் பயணித்த கார், சம்பா மாவட்டம் சன்வாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த 500 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவலறிந்த உள்ளூர் மக்கள், சம்பவ இடத்துக்கு வந்த போலீசாருடன் இணைந்து காரில் இருந்த சடலங்களை மீட்டனர். விபத்தில் ராஜேஷ்குமார் (40), அவரின் மனைவி ஹன்சோ(36), மகள் ஆர்த்தி(17) மகன் தீபக்(15) ஆகியோர் பலியாகினர்.
இவர்களுடன் ஹன்சோவின் சகோதரர் ஹேம்ராஜ்(37) என்பவரும் பலியானார். இவர் ராணுவத்தில் பணியாற்றுபவர். விடுமுறையை கொண்டாட ஊருக்கு வந்துள்ளார். இவர்களுடன் ராஜேஷ்குமார் ஊரைச் சேர்ந்த ராகேஷ்குமார் என்பவரும் விபத்தில் உயிரிழந்தார். இரவு நேரத்தில் விபத்து நிகழ்ந்ததால் பள்ளத்தாக்கில் விழுந்த காரில் இருந்து சடலங்களை மீட்க 6 மணி நேரத்துக்கும் மேல் ஆனது.
விபத்து குறித்து சம்பா மாவட்ட போலீஸ் எஸ்.பி., அபிஷேக் யாதவ் கூறுகையில், காருடன் 6 பேர் விபத்தில் சிக்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் சடலங்களை போராடி மீட்டோம். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.