மணிப்பூரில் வீரர் வெறிச் செயல் : 6 பேரை சுட்டு தற்கொலை
மணிப்பூரில் வீரர் வெறிச் செயல் : 6 பேரை சுட்டு தற்கொலை
ADDED : ஜன 25, 2024 01:09 AM
இம்பால், அசாம் ரைபிள்ஸ் படை வீரர் ஒருவர் சக ஊழியர்கள் ஆறு பேரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர்கள் காயம் அடைந்த நிலையில், அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மணிப்பூரில் அரங்கேறிஉள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தென்பகுதியில் நம் அண்டை நாடான மியான்மர் எல்லை உள்ளது. இங்கு, அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சக வீரர்கள் ஆறு பேரை சரமாரியாக சுட்டார். அதில் அவர்கள் அனைவரும் காயம் அடைந்தனர். இதைஅடுத்து அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீசார் மேலும் கூறியதாவது:
அசாம் ரைபிள்ஸ் வீரரால் சுடப்பட்ட ஆறு பேரும் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எதற்காக சுட்டார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டுக்கும் தற்போது இங்கு நடந்து வரும் இனக்கலவரத்துக்கும் தொடர்பு இல்லை. துப்பாக்கி சூடு நடத்திய வீரர் சமீபத்தில் தான் விடுமுறை முடிந்து பணியில் சேர்ந்தார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.