ADDED : பிப் 28, 2024 12:55 AM
புதுடில்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில், 16 இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இதில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஆறு பேர் சிக்கினர்.
பயங்கரவாதிகளுக்கும், போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையேயான தொடர்பை அழித்தொழிக்கும் வகையில் என்.ஐ.ஏ., அமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில், 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் பஞ்சாபில் 14 இடங்களிலும், ராஜஸ்தானில் இரண்டு இடங்களிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் கிரிமினல் குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் சிக்கினர்.
பிடிபட்ட நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகவும், தப்பி யோடிய காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு வழிகள் வாயிலாக, நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

