டேராடூனில் கார் - லாரி மோதல் இளைஞர்கள் 6 பேர் பரிதாப பலி
டேராடூனில் கார் - லாரி மோதல் இளைஞர்கள் 6 பேர் பரிதாப பலி
ADDED : நவ 15, 2024 11:33 PM

டேராடூன்: உத்தரகண்டில் அதிவேகமாக சென்ற சொகுசு கார், கன்டெய்னர் லாரி மீது மோதிய கோர விபத்தில், காரில் பயணம் செய்த மூன்று பெண்கள் உட்பட ஆறு இளைஞர்கள் பரிதாபமாக பலியாகினர்.
உத்தரகண்டில் டேராடூனின் முக்கிய சாலையில், புத்தம் புதிய இன்னோவா கார் ஒன்று அதிவேகமாக சென்றது.
100 கி.மீ., வேகம்
அங்குள்ள ஒ.என்.ஜி.சி., சவுக் அருகே சென்ற போது, சாலை சந்திப்பில் கடந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில், காரின் மேற்கூரை பெயர்ந்துசென்றதில் அதில் பயணித்த இருவரின் தலை துண்டானது.
அந்த இருவர் மற்றும் காரில் இருந்த மூன்று பெண்கள் உட்பட ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் குனீத் சிங், 19, காமாட்சி சிங்கால், 20, நவ்யா கோயல், 23, ரிஷப் ஜெயின், 24, அதுல் அகர்வால், 24, ஆகிய ஐந்து பேர் டேராடூனைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொரு நபரான குணால் குக்ரேஜா, 23, சம்பாவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
காரில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சித்தேஷ் அகர்வால், 25, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலையில் அடிபட்டு உள்ளதால், அவரால் விபத்து குறித்து எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. அப்பளம் போல் நொறுங்கிய காரும், சாலையில் சிதறி கிடந்த இறந்தவர்களின் உடல் பாகங்களும் விபத்தின் கோர முகத்தை எடுத்துக்காட்டின.
ராஜ்பூர் சாலை, சஹாரன்பூர் சவுக், பல்லிவாலா மற்றும் பல்லுபூர் வழியாக செல்லும் போது, சாதாரண வேகத்தில் சென்ற கார், ஓ.என்.ஜி.சி., சந்திப்பில் 100 கி.மீ., வேகத்தில் சென்றது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய கார், சாலையில் சென்ற மற்றொரு சொகுசு காரை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
சந்திப்பில் குறுக்கே வந்த கன்டெய்னர் லாரியை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும்.
இரங்கல்
விபத்து நடப்பதற்கு முன், படுகாயமடைந்து உள்ள சித்தேஷ் வீட்டில் நடந்த விருந்தில், உயிரிழந்த இளைஞர்கள் பங்கேற்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அதில், கையில் மதுபான கோப்பைகளுடன் விருந்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. இருப்பினும், கார் ஓட்டியவர் மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
பலியான ஆறு பேரின் குடும்பத்தினருக்கு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

