UPDATED : ஆக 13, 2026 07:55 PM
ADDED : ஆக 13, 2026 07:51 PM

ராஞ்சி:மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி ஜார்க்கண்டில் சட்டசபையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணி முதல்நிலை தேர்வில், முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைநகர் ராஞ்சியில், 20வது நாளாக நேற்றும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறைகேடு குறித்து சி.பி.ஐ., அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி போராட்டம் நடத்தப்படுகிறது. பல கட்ட பேச்சு நடத்தியும் இதற்கு முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் ராஞ்சியில் சட்டசபையை முற்றுகையிட கடந்த 10ம் தேதி பேரணியாக சென்ற மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். முற்றுகையிட சென்ற மாணவர்கள் 600 பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் 100 மாணவர்கள் பெயர்களை குறிப்பிட்டும் அடையாளம் தெரியாத மாணவர்கள் எனக் குறிப்பிட்டு 500 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
