ADDED : அக் 21, 2024 12:13 AM

ராஜாஜி நகர் : பெங்களூரு ராஜாஜி நகரில் ஹனுமனை ஆசிர்வதிப்பது போன்று, ராமர் சிலை 63 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளது.
பெங்களூரு ராஜாஜிநகர் 4வது பிளாக்கில் உள்ள, ராம்மந்திரா விளையாட்டு மைதானத்தின் அருகே, ஸ்ரீராம சேவா மண்டலியின் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலை தட்சிண அயோத்தி என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த கோவிலின் அருகே ராமர், ஹனுமனை ஆசிர்வதிப்பது போன்று 63 அடி உயரத்தில் சிலை அமைக்க, ஸ்ரீராம சேவா மண்டலி முடிவு செய்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி, ராமர் சிலை அமைக்க பூமி பூஜை நடந்தது. ஹரிஹரபுரா மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுயம்பிரகாஷ் சச்சிதானந்தா மகாசுவாமி, சித்தகங்கா மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சித்தலிங்க சுவாமி, பூமி பூஜை செய்தனர். சிலை அமைக்கும் பணிகளை, ஸ்ரீராம சேவா மண்டலி நிர்வாகிகள் முன்நின்று கவனித்தனர்.
சிலை செதுக்கும் பணி, கடந்த மாதம் முடிந்தது. பின், சிலைக்கு வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்நிலையில் வரும் 23ம் தேதி, ராமர் சிலை திறப்பு விழா நடக்கிறது.
சிலை திறப்பை ஒட்டி, இன்று முதல் மூன்று நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. இன்று மாலை 5:30 மணிக்கு கணபதி பூஜை, கலச பிரதிஷ்டை நடக்கிறது. நாளை காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, ராமர், சீதை, லட்சுமணனுக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், கணபதி ஹோமம், துர்கா ஹோமம் நடக்கிறது.
வரும் 23ம் தேதி காலை 11:00 மணிக்கு, ராமர் சிலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி, ஸ்ரீராம சேவா மண்டலி அழைப்பு விடுத்து உள்ளது.

