சமாஜ்வாதிக்கு 63; காங்கிரசுக்கு 17 உ.பி.,யில் தொகுதி பங்கீடு இறுதி
சமாஜ்வாதிக்கு 63; காங்கிரசுக்கு 17 உ.பி.,யில் தொகுதி பங்கீடு இறுதி
ADDED : பிப் 22, 2024 01:17 AM
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை, 'இண்டியா' கூட்டணி இறுதி செய்துள்ளது. அதன்படி, காங்கிரசுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 63 தொகுதிகளில் களம் காண்கிறது.
வரும் ஏப்., - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.
இதில், மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த, காங்., - சமாஜ்வாதி - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, இண்டியா என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
நிபந்தனை
லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, இக்கூட்டணி கட்சிகளிடையே அந்தந்த மாநிலங்களில் பேச்சு நடக்கிறது.
எனினும், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக, திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா அறிவித்தார்.
அவரை தொடர்ந்து, பஞ்சாபில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அறிவித்தது.
இதற்கிடையே, காங்., - எம்.பி., ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை, விரைவில் பா.ஜ., ஆளும் உத்தர பிரதேசத்துக்குள் நுழைய உள்ளது.
'தொகுதி பங்கீடு இறுதியானால் மட்டுமே இந்த யாத்திரையில் பங்கேற்பேன்' என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியானது.
அறிவிப்பு
இந்நிலையில், உ.பி.,யில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில், 17ல் காங்கிரசும், 63ல் சமாஜ்வாதியும் போட்டியிடுவது என முடிவு செய்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளன.
இந்த முடிவை, இரு கட்சிகளின் மாநில தலைவர்கள் நேற்று கூட்டாக அறிவித்தனர்.
ரேபரேலி, அமேதி, பிரதமர் மோடியின் வாரணாசி, கான்பூர் சிட்டி, பதேபூர் சிக்ரி, பாஸ்கான், சஹாரன்பூர், பிரயாக்ராஜ், மஹராஜ்கஞ்ச், அம்ரோஹா, ஜான்சி, புலந்த்ஷாஹர், காஜியாபாத், மதுரா, சீதாபூர், பாரபங்கி, தியோரியா ஆகிய 17 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சமாஜ்வாதி, 63 தொகுதிகளில் ஒரு தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் என கூறப்படுகிறது.