பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மஹா.,வில் 7 பேர் குழு நியமனம்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மஹா.,வில் 7 பேர் குழு நியமனம்
ADDED : ஜூலை 09, 2026 07:00 PM
மும்பை: மஹாராஷ்டிராவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வரைவு அறிக்கையை தயாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
நம் நாட்டில் ஜாதி, மதம், பாலின பாகுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற விஷயங்களில் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம். பெண்களுக்கு சம உரிமை, ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு தடை மற்றும் 'லிவ் இன்' எனப்படும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவுகளை பதிவு செய்வது கட்டாயம் ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய அம்சம்.
பொது சிவில் சட்டத்தை நாடு முழுதும் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக, உத்தரகண்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில், பா.ஜ-., சிவசேனா, தேசிவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள மஹாராஷ்டிராவிலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை அவர் அமைத்துள்ளார். இது குறித்து சட்டசபையில் நேற்று அவர் கூறியதாவது:
மஹாராஷ்டிராவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் உள்ள அரசு கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், மஹாராஷ்டிரா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சவான், மெஹரே, மஹாராஷ்டிராவின் முன்னாள் தலைமைச் செயலர் ஜெயின், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் வீரேந்திர சரப், அரசியலமைப்பு சட்ட நிபுணர் ரமேஷ் படாங்கே, கல்வியாளர் சுவர்ணா ராவல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நீதிபதி தேசாய் தலைமையிலான குழு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வரைவு அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும். அதையடுத்து, நாக்பூரில் நடக்கவுள் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
