9ம் வகுப்பு மாணவன் கொலை 5 மாணவர்கள் உட்பட 7 பேர் கைது
9ம் வகுப்பு மாணவன் கொலை 5 மாணவர்கள் உட்பட 7 பேர் கைது
ADDED : ஜன 04, 2025 10:22 PM
புதுடில்லி:கிழக்கு டில்லி ஷகர்பூரில், பள்ளிக்கு வெளியே 14 வயது மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த 7 சக மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஷகர்பூர் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிலருக்கு இடையே நேற்று முன் தினம் மாலை தகராறு ஏற்பட்டது. பள்ளிக்கு வெளியே மாலை 4:00 மணிக்கு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடந்தது. திடீரென ஒரு மாணவனை, சக மாணவர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவனை பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஹெட்கேவார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
ஐந்து சக மாணவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் பட்டதாரி வாலிபர். மற்றொரு குற்றவாளி பால் கடை நடத்தி வருகிறார்.
ரத்தக் கறை படிந்த ஆடைகள், ஒரு ஜோடி காலணிகள், கத்தி மற்றும் அதன் உறை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொலை செய்த மாணவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஷகர்பூர் போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.