ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
ADDED : ஆக 22, 2025 06:31 PM

சென்னை: ''உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம். பொழுதுபோக்கு வாழ்க்கையின் அங்கம் தான். அதுவே வாழ்க்கை இல்லை. ரீல்ஸ் பார்ப்பது அனைத்தும் உண்மை என நம்ப வேண்டாம், '' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வெறுப்புணர்வு
சென்னையில் தனியார் பள்ளி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒரு காலத்தில் கல்வி நமக்கு மறுக்கப்பட்ட ஒன்று. ஏராளமான போராட்டத்துக்கு பிறகு தான் கல்வி கதவு திறக்கப்பட்டது.இன்றும் கல்விக்காக போராடும் மக்கள் உள்ளனர். கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் நான் முதல்வர், புதுமைப்பெண், காலை உணவுத்திட்டம் என பல்வே றுதிட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் என செயல்படுகிறோம். ஆனால், இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு அரசு துணைபோகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இது நிரந்தரம் அல்ல. இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் சக்திகளின் கூட்டம் ரொம்ப நாள் நீடிக்காது. சாதிமத பிரிவினை பார்க்காமல் எல்லாரையும் சமமாக மதிக்கும் பண்பை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
முன்னேற வேண்டும்
தமிழகம் சமத்துவ பூங்காவாக, சகோதரத்துவத்தோடு திகழ மாணவர்கள் அந்த எண்ணத்தோடு வளர்ந்தால் தான் முடியும். இதனால் பள்ளி நிகழ்ச்சிகளிலும் அரசியலிலும் அட்வைசும் பேச வேண்டி உள்ளது. சமூக படிப்பில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்பு கிடைப்பது இல்லை. கிடைப்பவர்கள். வாய்ப்பு கிடைப்பவர்கள் அதனால் கிடைக்கும் திறமையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.இன்றைக்கு பள்ளியில் படிக்கும் நீங்கள் பட்டப்படிப்பு ஆராய்ச்சி படிப்பு படித்து முன்னேற வேண்டும்.
நம்பாதீர்கள்
அறிவியல் வளர்ந்துள்ளது. அறிவை பெற தேவையான பல வாய்ப்புகள் உள்ளது. செயற்கை நுண்ணறிவு புரட்சியை உண்டாக்கி உள்ளது. எல்லாத்துக்கும் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது நாம் எதற்கு படிக்க வேண்டும் என நினைத்து விடாதீர்கள். எந்த கண்டுபிடிப்பையும் உங்கள் வளர்ச்சிக்காக தான் பயன்படுத்த வேண்டுமே தவிர உங்கள் சிந்தனையை சிதைக்க அனுமதிக்கக்கூடாது. உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம். பொழுதுபோக்கு வாழ்க்கையின் அங்கம் தான். அதுவே வாழ்க்கை இல்லை. ரீல்ஸ் பார்ப்பது அனைத்தும் உண்மை என நம்ப வேண்டாம்.
கெத்து
' Likes', 'Views' கெத்து இல்லை. ' Marks' ' degerees' தான் கெத்து. படிப்பதோடு நன்றாக விளையாடுங்கள். உடல்நிலையை பார்த்து கொள்ள வேண்டும். எப்படி 'Upgrade' ஆக வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறார்கள் என பெற்றோர் காது கொடுத்து கேளுங்கள். மனது விட்டு பேசுங்கள். எந்த பிரச்னை என்றாலும் பயப்படாமல் நம்மிடம் ஷேர் செய்ய வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்க வேண்டும். சிறந்த நண்பர்கள் யார் என கேட்டால் அப்பா அம்மா என சொல்ல வேண்டும். அப்படி பழகுங்கள். கல்வி, நண்பர்கள், சூழல் இதுதான் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

