ADDED : அக் 27, 2024 11:05 PM

பெங்களூரு: பெலகேரி இரும்புத்தாது கடத்தல் வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைலுக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 44 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக, கர்நாடகாவின் பல்லாரி, ஹொஸ்பேட், சண்டூர், சித்ரதுர்காவின் வனப்பகுதியில் இருந்து, வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுகுறித்து, நடவடிக்கை எடுத்த வனத்துறை அதிகாரிகள், 2010, மார்ச் 20ம் தேதி, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 8.5 லட்சம் மெட்ரிக் டன் இரும்புத்தாதுவை பறிமுதல் செய்தனர்.
மாயம்
இதை உத்தரகன்னடா, கார்வாரின் பெலகேரி துறைமுகத்தில் வைத்திருந்தனர். இது தொடர்பாக, துறைமுக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
சில மாதங்களுக்கு பின், வனத்துறை அதிகாரிகள் குழுவினர், துறைமுகத்துக்கு சென்று பார்வையிட்டபோது, வெறும் 2 லட்சம் மெட்ரிக் டன் இரும்புத்தாது மட்டுமே இருந்தது. 250 கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்புத்தாது மாயமானது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, லோக் ஆயுக்தாவில், வனத்துறை புகார் அளித்தது. விசாரணை நடத்திய அன்றைய லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை அளித்தார். சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி சிபாரிசு செய்திருந்தார்.
அதன்படி, விசாரணையை அன்றைய பா.ஜ., அரசு, 2010, ஜூன் 23ல் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது. அவர்கள் விசாரணையில், காங்கிரசின் சதீஷ் சைலுக்கு சொந்தமான நிறுவனம், 7.23 லட்சம் டன் இரும்புத்தாதை, பெலகேரி துறைமுகம் வழியாக, சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது தெரிய வந்தது.
விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வாதம், பிரதிவாதங்களை அலசி ஆராய்ந்த நீதிமன்றம், கார்வார் காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் சைல், குற்றவாளி என, அக்டோபர் 24ல் அறிவித்தது. 25ல் தண்டனை அறிவிப்பதாக கூறியது. அவரை கைது செய்யும்படி உத்தரவிட்டது. சி.பி.ஐ., கைது செய்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர்.
கண்ணீருடன் கதறல்
நேற்று முன் தினம், விசாரணை நடந்தபோது, சதீஷ் சைல், 'நானும் நோயாளி, என் மனைவியும் நோயாளி.
குறைவான தண்டனை விதியுங்கள்' என கண்ணீருடன் கோரினார். நீதிமன்றமும், மறுநாள் தண்டனை அறிவிப்பதாக கூறியது.
இதன்படி நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. சதீஷ் சைல் உட்பட ஏழு பேருக்கும் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. சதீஷ் சைலுக்கு 44 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சந்தோஷ் கஜானன பட் தீர்ப்பளித்தார்.
மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி, இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான சிறை தண்டனை கிடைத்தால், எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். சதீஷ் சைல் ஏழு ஆண்டு சிறை தண்டனைக்கு ஆளானதால், அவரது பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம்.
மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் முறையிட, அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.