வாரம் 70 மணி நேர வேலை... இதுக்காகத்தான் சொன்னேன்; நாராயண மூர்த்தி விளக்கம்
வாரம் 70 மணி நேர வேலை... இதுக்காகத்தான் சொன்னேன்; நாராயண மூர்த்தி விளக்கம்
ADDED : டிச 16, 2024 07:45 AM

கோல்கட்டா: இந்தியர்கள் வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியம் குறித்து இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி விளக்கம் கொடுத்துள்ளார்.
கோல்கட்டாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது: உலகில் தலைசிறந்த நிறுவனங்களுடன் எங்களை ஒப்பிட்டு பார்ப்போம். நாங்கள் சிறந்து விளங்குவோம் என்று கூறுவேன். இப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியர்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியது உள்ளது என்று கூறுவேன். நமது எண்ணங்களை உயர்வாக வைக்க வேண்டும்.
ஏனெனில், நாட்டில் 80 கோடி இந்தியர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். அப்படியானால், 80 கோடி பேர் இன்னும் வறுமையில் இருக்கின்றனர். நாம் கடினமாக உழைக்கவில்லை எனில், யார் உழைப்பார்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே வறுமைக்கு எதிரான ஒரே தீர்வாகும். தொழில்முனைவில் அரசின் பங்களிப்பு நிச்சயம் கிடையாது.
ஆனால், தொழில்முனைவோர்கள் வேலைவாய்ப்புகளையும், முதலீட்டாளர்களுக்கு செல்வத்தையும் உருவாக்கி, வரி கட்டுவதன் மூலம் தேசத்தை கட்டமைக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளேன். உலக நாடுகள் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு மதிப்பு கொடுக்கின்றன. நமது செயல்பாடுகள் நல்ல அங்கீகாரத்தை கொடுக்கும். அந்த அங்கீகாரத்திற்கு மரியாதை கிடைக்கும். அந்த மரியாதை அதிகாரத்தை கொடுக்கும்.
எனவே, நமது முன்னோர்களின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். சீன தொழிலாளர்களால் நம்மை விட 3.5 மடங்கு பொருட்களை தயாரிக்க முடியும். முட்டாள்தனமான கருத்துக்களை எழுதிவிட்டு, ஏழைகளாகவும், உலகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் நாம் வாழ்வது எளிது. ஆனால், உங்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்து வாழ வேண்டும், இவ்வாறு கூறினார்.

