டிரைவர் இல்லாமல் 70 கி.மீ., ஓடிய சரக்கு ரயிலால் பரபரப்பு
டிரைவர் இல்லாமல் 70 கி.மீ., ஓடிய சரக்கு ரயிலால் பரபரப்பு
ADDED : பிப் 26, 2024 03:46 AM
ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை, 70 கி.மீ., துாரத்துக்கு, டிரைவர் இல்லாமல், மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் சரக்கு ரயில் இயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு - காஷ்மீரில் இருந்து பஞ்சாபுக்கு ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு, 53 பெட்டிகளுடன், சரக்கு ரயில் நேற்று காலை புறப்பட்டது. இந்த ரயில், ஜம்மு - காஷ்மீரின் கதுவா ரயில்வே ஸ்டேஷனில், டிரைவர் மாறுவதற்காக நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து கீழே இறங்கிய டிரைவர், 'ஹேண்ட் பிரேக்'கை போட மறந்து விட்டார்.
ரயில்வே பாதை சரிவாக இருந்ததால், ரயில் மெதுவாக நகர்ந்தது. பின், பிடிப்படியாக ரயிலின் வேகம் அதிகரித்தது. 100 கி.மீ., வேகத்தில், அந்த சரக்கு ரயில் இயங்கியது.
ஜம்மு - காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை, டிரைவர் இல்லாமல், 70 கி.மீ., துாரத்தை கடந்த அந்த ரயில், ஒரு வழியாக பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள உஞ்சி பாசி என்ற ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த அசம்பாவிதத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
டிரைவர் மாறுவதற்காக, கதுவா ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது டிரைவர் ஹேண்டு பிரேக் போட மறந்து விட்டார். டிரைவர் மற்றும் உதவியாளர் இல்லாமல், இந்த ரயில் 70 கி.மீ., துாரம் கடந்து பஞ்சாப் வரை வந்து விட்டது. உஞ்சி பாசி ரயில்வே ஸ்டேஷனில், தண்டவாளத்தில் மரக்கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளை வைத்து அந்த சரக்கு ரயிலை நிறுத்தினோம். இது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டிரைவர் இல்லாமல், 100 கி.மீ., வேகத்தில் சரக்கு ரயில் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

