ADDED : செப் 25, 2025 01:44 AM
தண்டேவாடா: சத்தீஸ்கரில், 64 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட, 30 பேர் உட்பட 71 நக்சல்கள் தண்டேவாடா பகுதியில் சரண் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ள மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சமீப காலமாக ஏராளமான நக்சல்கள் சரண் அடைகின்றனர்.
இந்நிலையில், நக்சல்களின் வெற்று சித்தாந்தங்களில் வெறுப்படைந்த 21 பெண் நக்சல்கள், இரு சிறுமியர், ஒரு சிறுவன் உட்பட 71 நக்சல்கள் நேற்று தண்டேவாடா போலீசில் சரண் அடைந்தனர்.
இது குறித்து தண்டேவாடா மாவட்ட போலீஸ் எஸ்.பி., கவுரவ் ராய் கூறியதாவது:
பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், போலீசாரால் தேடப்பட்டு வந்த பாமன் மட்காம், 30, சமீளா மாண்டவி, 20, ஆகியோர் தலைக்கு தலா 8 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தவிர சோம்லி கவாசி, 25, ரோகினி பர்ஷே, 25, கேவிதா மாட்வி, 25, சந்தோஷ் மாண்டவி, 30 ஆகியோர் தலைக்கு தலா 5 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தவிர ஒருவருக்கு 3 லட்சம் ரூபாயும், ஆறு பேருக்கு தலா 2 லட்சமும், ஒன்பது பேருக்கு தலா 1 லட்சமும், எட்டு பேருக்கு தலா 50,000 ரூபாயும் பரிசாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இவ்வாறு 30 நக்சல்களுக்கு மொத்தம் 64 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட நிலையில், அவர்கள் உட்பட 71 நக்சல்கள் தண்டேவாடா பகுதியில் நேற்று சரண் அடைந்தனர்.
இவர்கள் தலா 50,000 ரூபாய் நிதியுதவியுடன் அரசு கொள்கைப்படி மறுவாழ்வு பலன்களையும் பெறுவர். இதன் மூலம், பரிசு தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட 297 பேர் உட்பட 1,113 நக்சல்கள் கடந்த 2020 முதல் இதுவரை சரண் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.