படித்தால் மட்டும் போதுமா; பறக்க ஆசைப்பட்டு இருப்பதை பறிகொடுத்தார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி!
படித்தால் மட்டும் போதுமா; பறக்க ஆசைப்பட்டு இருப்பதை பறிகொடுத்தார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி!
ADDED : செப் 04, 2024 09:11 AM

ஹைதராபாத்: நாட்டின் மிகப்பெரிய சைபர் மோசடிகளில் ஒன்றாக, ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.13 கோடியை அபேஸ் செய்த சம்பவம், தெலுங்கானாவில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர், பொதுத்துறை நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 75 வயதான இவரிடம், பணம் நிறைய இருந்தது. அதை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து மேலும் சம்பாதிக்க ஆசைப்பட்டார். அப்போது அவருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதன்படி முதலீடு செய்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த மர்ம நபர்கள் குறிப்பிட்ட மொபைல் செயலி மூலம் 4 கோடி ரூபாயை முதலீடு செய்தார், அந்த ஓய்வு பெற்ற அதிகாரி. ஒரு சில நாட்களிலேயே, அந்த முதலீடு பணம், 10 கோடியாக பெருகி விட்டது. குறிப்பிட்ட அந்த மொபைல் செயலியில் அவரது கணக்கில் 10 கோடி ரூபாய் பணம் இருப்பதாக காட்டியது.
முதலீடு
உடனே, முதலீடு, லாபம் இரண்டையும் எடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர் முயற்சித்தார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. பதிலுக்கு, நீங்கள் ஜி.எஸ்.டி, சி.ஜி.எஸ்.டி, மாற்று வரி, அன்னியச் செலாவணி வரி மற்றும் பலவற்றைச் செலுத்தினால் தான் பணம் எடுக்க முடியும் என்று அதன் வாடிக்கையாளர் சேவை பிரிவில் தகவல் தெரிவித்தனர்.
புகார்
போட்ட பணத்தை எடுத்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில் சிறிது சிறிதாக மேலும் 9 கோடி ரூபாய் செலுத்தி விட்டார். ஆக மொத்தம் தன்னிடம் இருந்த 13 கோடி ரூபாயை முதலீடு செய்த பிறகு தான் அவருக்கு சந்தேகம் வந்தது. 'பணம் அக்கவுண்ட்ல இருக்குது, ஆனா எடுக்க முடியலையே' என்று நண்பர்களிடம் விசாரித்தார். அவர்கள் உஷார்படுத்திய பிறகே புத்தி வந்தது. போலீசுக்கு சென்று புகார் அளித்தார்.
போனது ரூ.13 கோடி! வந்தது ரூ.20 லட்சம்!
அதற்குள் 50 நாட்கள் ஆகி விட்டன. புகாரளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மீண்டு வருவதற்கான வாய்ப்பு குறைவு என அதிகாரிகள் கூறினர். அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மொத்தம் ரூ.13 கோடியில் ரூ.20 லட்சத்தை மட்டுமே போலீசாரால் மீட்க முடிந்தது. மோசடி கும்பல் துபாயில் ரூ.2 கோடி பணத்தை எடுத்துள்ளனர்.
விசாரணை
ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளில் காசோலைகள், ஏ.டி.எம்., கார்டுகள் மூலம் இந்தத் தொகை எடுக்கப்பட்டது. துபாயில் இருந்து ரூ.2 கோடி பணம் எடுக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து, பணத்தை எடுத்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் தனி நபரிடம் நடந்த சைபர் கிரைம் மோசடிகளில் இதுவே மிகப்பெரியது என்று போலீசார் கருதுகின்றனர். யாரேனும் எங்களிடம் முதலீடு செய்யுங்கள் என்று கூறினால் உஷாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

