மூங்கிலால் வீட்டு பொருட்களை உருவாக்கும் 76 வயது தாசப்பா
மூங்கிலால் வீட்டு பொருட்களை உருவாக்கும் 76 வயது தாசப்பா
ADDED : பிப் 17, 2024 11:05 PM

வீட்டு சமையல் அறையில் பிளாஸ்டிக் பொருட்கள் சூழ்ந்துள்ள நிலையில், மூங்கிலை பயன்படுத்தி பலவிதமான வீட்டுப் பொருட்களை இன்னும் பலர் வாங்கிச் செல்கின்றனர்.
குடகு மாவட்டம், விராஜ்பேட்டின் யவகபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாசப்பா, 76. மூங்கிலை பயன்படுத்தி, பலவிதமான வீட்டு பொருட்களை தயாரிக்கும் கலையை அறிந்தவர்.
இவர், 1947 ஜூலை 15ம் தேதி துங்கா - சின்னம்மாவுக்கு மகனாக பிறந்தார். செய்யாண்டேனில் உள்ள மாதிரி தொடக்க பள்ளியில் 7ம் வகுப்பு வரை படித்தார். 1973ல் தேவகியை மணந்தார். இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள்.
ஆரம்பத்தில் மூங்கிலைப் பயன்படுத்தி அன்றாட பயன்பாட்டு கருவிகளை தயாரிக்க துவங்கினார். பின், இதை ஒரு பொழுதுபோக்காக மாற்றி, கவர்ச்சிகரமான கருவிகளை தயாரித்து வந்தார். இவர் செய்யும் மூங்கில் கருவிகள், இன்றும் பலரின் கவனத்தை ஈர்க்கின்றன.
மூங்கில் மூலம் பலவிதமான வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கிறார். அரிசி, மோர் சுத்தம் செய்யவும், அரிசியை கழுவி உலர்த்தவும், மீன் பிடிக்க பயன்படுத்தவும் என பல விதமான கருவிகளை, கேட்பதை செய்து கொடுக்கும் திறமைசாலி.
தனது வீட்டின் பெரியவர்களிடம் கூடை பின்னும் கலையை கற்றுக் கொண்ட தாசப்பா, தற்போது வயது தொடர்பான பிரச்னை, வனத்துறையின் கடுமையான நடவடிக்கையால் மூங்கில் கிடைக்காத காரணத்தாலும், எப்போதாவது கூடை பின்னுகிறார்.
இக்கலையை இவரின் மூத்த மகன் அறிந்துள்ளார். 2007ல் வருவாய் துறை கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்ற பின், ஓய்வு நேரத்தில் தந்தை உதவியாக உள்ளார். அவரே கூட கூடை பின்னுகிறார்.
முன்னர் மூங்கிலால் செய்யப்பட்ட கருவிகளுக்கு டிமாண்ட் இருந்தது. காலம் மாறி அனைவரும் பிளாஸ்டிக்கால் ஆன கருவிகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், மூங்கில் தேவை குறைந்து உள்ளது.
தாசப்பா,
மூங்கில் கலைஞர்