பி.எப்.,பில் இணைவதில் சிக்கல்: புதிய விதியை தளர்த்த கோரிக்கை
பி.எப்.,பில் இணைவதில் சிக்கல்: புதிய விதியை தளர்த்த கோரிக்கை
ADDED : ஆக 13, 2025 04:28 AM

புதுடில்லி: இ.பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் புதிய விதியால், முதல் முறையாக பணியில் சேரும் பணியாளர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக இந்திய பணியாளர் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
வைப்பு நிதி நாடு முழுதும் உள்ள பல்வேறு தனியார் நிறுனங்களில் கோடிக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு ஏற்படுத்தியது தான் இ.பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.
பணியில் சேரும் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும். அதற்கு இணையாக நிறுவனம் அளிக்கும் தொகையையும் சேர்த்து பி.எப்., கணக்கில் சேர்க்கப்படும்.
இதற்காக தொழிலாளர்களுக்கு யு.ஏ.என்., எனப்படும், தனி அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல் முறையாக ஒரு நிறுவனத்தில் சேரும் பணியாளருக்கு யு.ஏ.என். வழங்குவதில் இ.பி.எப்.ஓ., புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இந்த விதி ஆக., 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய விதியின்படி ஒரு நிறுவனத்தில் சேரும் பணியாளர், 'உமாங்' செயலி வழியாக, எப்.ஏ.டி., எனப்படும், முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முக அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும்.
அதன்படி இந்த விதி அமலான இரண்டே நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களுக்கு யு.ஏ.என்., பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக இந்திய பணியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கடந்த 5ம் தேதி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில், முக அடையாளத்தை பதிவு செய்வதில் பல நடைமுறை சிக்கல் இருப்பதால், புதிதாக சேரும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. சம்பளம் தாமதமாவதால், பணியாளரும், நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.
தாமதம் பெரும்பாலான ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களிடம், 'ஸ்மார்ட் போன்' களோ அல்லது நிலையான இணையசேவையோ இல்லாததால் 'உமாங்' செயலி மூலம் முக அடையாளத்தை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதையும் இந்திய பணியாளர் கூட்டமைப்பு சுட் டிக் காட்டியுள்ளது.
யு.ஏ.என்., எண் பெற முடியாததால் சம்பளம் மற்றும் பி.எப்., தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்படுவது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அலுவல் பணியை பெரிதாக பாதித்திருக்கிறது.
எனவே, முதல் முறையாக பணிக்கு சேருபவர்களுக்கு பி.எப்., பதிவின் போதே, 'ஆன்லைன்' மூலமாக யு.ஏ.என்., வழங்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என இந்திய பணியாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

