சிறுமி கருப்பையில் இருந்து 8 கிலோ நீர்க்கட்டி அகற்றம்
சிறுமி கருப்பையில் இருந்து 8 கிலோ நீர்க்கட்டி அகற்றம்
ADDED : ஏப் 03, 2025 07:05 AM
இந்துார்: மத்திய பிரதேசத்தில், 15 வயது சிறுமியின் கருப்பையில் இருந்த, 8 கிலோ நீர்க்கட்டியை அகற்றி அரசு டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ம.பி.,யின் இந்துார் நகரில் உள்ள மஹாராஜா துகோஜிராவ் அரசு மருத்துவமனைக்கு, 15 வயது சிறுமி சிகிச்சைக்காக வந்தார். வயிற்று வலியுடன் மூச்சுவிட சிரமம் இருப்பதாக கூறிய அந்த சிறுமியை, டாக்டர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சிறுமியின் கருப்பையில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மார்ச் 28ம் தேதி மகப்பேறு டாக்டர் சுமித்ரா தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதுகுறித்து, டாக்டர் சுமித்ரா கூறியதாவது:
சிறுமியின் கருப்பையில், திரவத்தால் ஆன பை போன்ற பொருள் காணப்பட்டது. முன்னதாக, 8 கிலோ எடையுள்ள இந்த நீர்க்கட்டியுடன் சேர்த்து, அந்த சிறுமி 39 கிலோ எடை இருந்தார். நீர்க்கட்டி அகற்றும் ஆப்பரேஷனுக்கு பின், சிறுமி குணமடைந்து வருகிறார்.
இந்த கட்டி அகற்றப்படாமல் இருந்திருந்தால், சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அகற்றப்பட்ட நீர்க்கட்டி, புற்று நோய் கட்டியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அதை திசு நோயியல் துறைக்கு அனுப்பி சோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

