ADDED : அக் 17, 2026 06:59 PM
கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில், டில்லி – மும்பை விரைவுச்சாலையில் சென்ற மினி பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்; 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் பெத்துல் மாவட்டங்களைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர், ராஜஸ்தானில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்வதற்காக மினி பஸ்சில் நேற்று முன்தினம் போபாலில் இருந்து புறப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை 6:00 மணியளவில், டில்லி – மும்பை விரைவுச்சாலையில் சென்ற மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 15 அடி ஆழ கால்வாயில் கவிழ்ந்தது. கால்வாயில் சேறும் தண்ணீரும் தேங்கியிருந்ததால், மீட்புப் பணியில் முதலில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, ‘கிரேன்’கள் வரவழைக்கப்பட்டு, பஸ்சை வெளியே எடுத்து, அதில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் எட்டு பேர் ஏற்கனவே இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் எட்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம்,’’ என, கோட்டா ஊரக எஸ்.பி., சுஜீத் சங்கர் தெரிவித்தார்.
