ADDED : டிச 28, 2024 12:14 AM

பதிண்டா,: பஞ்சாப் மாநிலத்தில், பாலத்தில் இருந்து வாய்க்காலில் தனியார் பஸ் கவிழ்ந்து விழுந்ததில், 8 பயணியர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் தல்வாண்டி சபோ நகரில் இருந்து பதிண்டாவுக்கு, தனியார் பஸ் நேற்று காலை சென்றது. அந்த பஸ்சில், 45 பயணியர் இருந்தனர்.
ஜீவன் சிங்வாலா கிராமத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், லசரா வாய்க்காலில் கவிழ்ந்தது.
அங்கிருந்த மக்கள் உதவியுடன் போலீஸ் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 2 வயது பெண் குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் காயம்அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வானிலை மோசமாக இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவிலும் மீட்புப் பணி தொடர்ந்தது.
பதிண்டா துணை ஆணையர் ஷோகத் அஹ்மத் பர்ரே சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, தலா, 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுஉள்ளார்.