இந்துாரில் கழிவுநீர் கலந்த குடிநீர் பருகிய 8 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இந்துாரில் கழிவுநீர் கலந்த குடிநீர் பருகிய 8 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
ADDED : ஜன 01, 2026 12:13 AM
இந்துார்: மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் அசுத்தமான குடிநீரை பருகிய பொதுமக்களில், 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துாரின் பகீரதபுரா பகுதிக்கு குழாய் வழியாக குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.
இந்நிலையில், குடிநீரை பருகிய அப்பகுதி மக்களில் பலர், வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அடுத்தடுத்து, 8 பேர் உயிரிழந்ததால், பகீரதபுரா பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், நுாற்றுக்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே குடிநீர் கலங்கிய நிறத்தில் இருந்ததாகவும், அதன் சுவை உவர்ப்பாக மாறி இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், அதன் அருகே கட்டப்பட்ட கழிப்பறையில் இருந்து, வெளியேறிய கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்ததால், இந்த பிரச்னை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து, இந்துார் மேயர் பார்கவா கூறுகையில், ''குடிநீருக்காக புதிய குழாய் அமைப்பதற்கான டெண்டர் கடந்த மாதமே விடப்பட்டது. ஆனால், பணி ஏன் தாமதம் அடைந்தது என தெரியவில்லை. அலட்சியத்துடன் நடந்து வரும் பணிகள் குறித்து துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மண்டல பொறுப்பாளரும், உதவி பொறியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அசுத்தமான குடிநீர் பருகியதால், உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் மோகன் யாதவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், உடல்நலம் பாதித்தோரின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

