பரிதாபாதில் 'லிப்ட்' தருவதாக அழைத்து சென்று ஓடும் வேனில் இளம் பெண் கூட்டு பலாத்காரம் சாலையில் வீசி சென்ற இருவர் கைது
பரிதாபாதில் 'லிப்ட்' தருவதாக அழைத்து சென்று ஓடும் வேனில் இளம் பெண் கூட்டு பலாத்காரம் சாலையில் வீசி சென்ற இருவர் கைது
ADDED : ஜன 01, 2026 12:13 AM
பரிதாபாத்: ஹரியானாவின் பரிதாபாதில் இளம்பெண்ணுக்கு 'லிப்ட்' தருவதாகக் கூறி, வேனில் அழைத்துச் சென்ற இளைஞர்கள் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சாலையில் வீசியதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஹரியானாவின் பரிதாபாதைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் கணவரிடம் இருந்து பிரிந்து, தாயுடன் அந்த பெண் வசிக்கிறார்.
இந்நிலையில், கடந்த 29ம் தேதி தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டை விட்டு வெளியேறி தோழியை காண சென்றுள்ளார்.
நள்ளிரவில் வீடு திரும்ப பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த வேன் டிரைவர் வாகனத்தை நிறுத்தி, அவரை வீட்டில் விட்டு செல்வதாக கூறியுள்ளார்.
இதை நம்பி ஏறிய அந்தப் பெண்ணை, வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் குர்கான் நோக்கி வேனை ஓட்டியுள்ளார்.
சுமார் இரண்டு மணிநேரம் ஓடும் வேனில் டிரைவரும் அவருடன் இருந்த மற்றொரு நபரும் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
போராடிய அப்பெண்ணை அடித்து, உதைத்து சாலையில் வீசி தப்பிச் சென்றனர்.
இதில், முகத்தில் பலத்த காயமடைந்த அப்பெண், மொபைல் போனில் தன் சகோதரிக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, உறவினர்களுடன் வந்து சாலையோரம் ஆபத்தான நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 12 தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

