18ம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள்: கூடுதல் போலீஸ் நியமனம்
18ம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள்: கூடுதல் போலீஸ் நியமனம்
ADDED : டிச 09, 2024 12:52 AM

சபரிமலை சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் 18 ம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். கூட்டத்தை சமாளிக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு, மண்டல கால உற்ஸவத்திற்காக டிச.,7 வரை 17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்ட மேலாண்மை திட்டத்தை போலீசார் மாற்றி அமைத்துள்ளனர். 4 பிரிவுகளாக 1847 போலீஸ் அதிகாரிகள் சன்னிதானத்தில் 952, பம்பையில் 515, நிலக்கல்லில் 380 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நெருக்கடியான 18 ம் படியில் போலீசாரை கூடுதலாக நியமித்து சிரமம் இன்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 18ம் படியில் போலீசார் கழற்சி முறையில் மாற்றப்படுகின்றனர். 18ம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 80 பக்தர்கள் செல்கின்றனர்.
தற்போது 18ம் படி பணியில் வலிமை கொண்ட 135 போலீசார் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 45 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும் அந்த குழுவை 15 பேர் கொண்ட 3 உபக்குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 15 நிமிடங்கள் பணி, 30 நிமிடங்கள் ஓய்வு என்ற அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை அந்த 45 பேர் கொண்ட குழு சுழற்சி முறையில் மாறும்.
இந்நிலையில் மகர விளக்கு பூஜையன்று கூட்டம் அதிகமாகும் என்பதால் 18ம் படி பணியில் 180 போலீசாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 180 பேரும் 60 பேர் கொண்ட 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதிலிருந்து 20 பேர் கொண்ட 3 குழுக்களாக மாற்றப்பட்டு பிரிந்து பணி மேற்கொள்ள போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

