கட்டுப்பாட்டு அறையில் கோளாறு டில்லியில் 800 விமானங்கள் தாமதம்
கட்டுப்பாட்டு அறையில் கோளாறு டில்லியில் 800 விமானங்கள் தாமதம்
ADDED : நவ 07, 2025 11:38 PM
புதுடில்லி: டில்லி விமான நிலையத்தின், ஏ.டி.சி., எனப்படும், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், 800 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேற்று தாமதமடைந்தது.
டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தினமும் 1,500க்கும் மேற்பட்ட விமானங்களை கையாள்கிறது. விமானம் ஓரிடத்தில் இருந்து புறப்பட்டு மற்றொரு இடத்துக்கு சென்று சேரும் வரை அதற்கான விமான பயண திட்டம் தயாரிக்கப்படும். இதில் எங்கிருந்து எங்கு, எவ்வளவு உயரம், எந்த நேரம், எந்த வழியில் செல்கிறது என்ற தகவல்கள் இருக்கும்.
இந்த விபரங்களை, ஏ.எம்.எஸ்.எஸ்., எனப்படும், தானியங்கி தகவல் பரிமாற்ற அமைப்பு, விமானி, விமான நிலையங்கள், விமான கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கும்.
இந்த விமான திட்டத்தை வைத்தே, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தின் போக்கை கண்காணிக்க முடியும். இந்நிலையில், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்த இரு அமைப்புகளிலும் நேற்று முன்தினம் மாலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், தானியங்கியாக தகவல் பரிமாற்றம் நடக்கவில்லை.
வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தாங்களாக தகவல்களை பெற்று அனுப்பினர். இதனால் அதிக நேரம் எடுத்தது. இதன் காரணமாக, 800க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாகின. ஆயிரக்கணக்கான பயணியர், விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
சைபர் தாக்குதல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'விமான நிலைய கணினிகள் எதுவும் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த பிரச்னை எழுந்தது' என்றனர்.
டில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட கோளாறால், மும்பை, லக்னோ, ஜெய்ப்பூர், வாரணாசி உட்பட பிற நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டன.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், 'டில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இங்கும் விமான புறப்பாடு, வருகை தாமத மானது.
பயணியர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, நிலையை அறிந்துகொள்ள வேண்டுகிறோம்' என கூறப்பட்டுள்ளது.

