வந்தே மாதரம் பாடல் வரிகளை ஜவஹர்லால் நேரு... நீக்கினார்!: பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க குற்றச்சாட்டு
வந்தே மாதரம் பாடல் வரிகளை ஜவஹர்லால் நேரு... நீக்கினார்!: பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க குற்றச்சாட்டு
ADDED : நவ 07, 2025 11:43 PM

புதுடில்லி: “தேசபக்தி பாடலான வந்தே மாதரத்தில் இடம் பெற்றிருந்த முக்கிய வரிகள், 1937ல், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவால் வேண்டுமென்றே வெட்டி துாக்கி எறியப்பட்டன. அதுவே பிரிவினைக்கான விதைகளை விதைத்து, பிளவுபடுத்தும் மனப்பான்மையை உருவாக்கி, நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். வங்க மொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 'வந்தே மாதரம்' பாடலை, 1875 நவ., 7ல், அட்சய நவமி நாளில் எழுதினார். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்த பாடல், 'ஆனந்த மடம்' என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நாடு முழுதும் அடுத்த ஓராண்டுக்கு கலைநிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
சிறப்பு தபால் தலை இதன் ஒருபகுதியாக, தலைநகர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.
வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகளானதை குறிக்கும் வகையில், சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை அவர் வெளியிட்டார். தேசிய கலைஞர்களால் பாடப்பட்ட, 'வந்தே மாதரம்' பாடலையும் அவர் கேட்டு மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:
வந்தே மாதரம் பாடல், நாட்டின் சுதந்திர போராட்டத்தின் குரலாக ஒலித்தது. அது, ஒவ்வொரு இந்தியரின் உணர்வையும் வெளிப்படுத்தியது. ஆனால் துரதிருஷ்டவசமாக, 1937ல், வந்தே மாதரம் பாடலில் இடம் பெற்றிருந்த சில முக்கிய வரிகள், வெட்டி துாக்கி எறியப் பட்டு, அதன் ஆன்மா அகற்றப்பட்டது.
வந்தே மாதரம் பாடலை பிளவுபடுத்திய செயலே, பிரிவினைக்கான விதைகளையும் விதைத்தது. நாட்டை கட்டமைக்கும் இந்த மஹா மந்திரத்திற்கு ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது என்பதை, இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பிளவுபடுத்தும் மனப்பான்மை இன்றும் நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
வந்தே மாதரம் எல்லா காலகட்டங்களுக்கும் பொருத்தமானது. எதிரிகள் பயங்கரவாதத்தை பயன்படுத்தி நம் பாதுகாப்பையும், கவுரவத்தையும் தாக்கிய போது, துர்க்கையின் வடிவத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பது இந்தியாவிற்கு தெரியும் என்பதை உலகம் கண்டது.
பெண் சக்தி வந்தே மாதரம் என்பது ஒரு வார்த்தை, மந்திரம், சக்தி, கனவு, தீர்மானம். இது பாரத அன்னை மீதான பக்தி; வழிபாடு. இது, நம் வரலாற்றுடன் நம்மை இணைக்கிறது. நம் எதிர்காலத்திற்கு புதிய தைரியத்தை அளிக்கிறது.
இந்தியர்களான நாம் அடைய முடியாத எந்த இலக்கும் இல்லை. அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நாம் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு நாட்டை கட்டமைக்க வேண்டும்.
தேசத்தை ஒரு தாயாகவும், தாயை வலிமையின் தெய்வீக வடிவமாகவும் கருதும் இந்த உணர்வு, ஆண்களையும், பெண்களையும் சமமாக உள்ளடக்கிய ஒரு சுதந்திர இயக்கத்திற்கு வழிவகுத்தது. இது, நாட்டை கட்டமைப்பதில் பெண் சக்தியை முன்னணியில் வைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏளனம் செய்தார்! கடந்த 1937ல், வந்தே மாதரம் பாடலில் இடம்பெற்றிருந்த கடவுள் துர்காதேவி பற்றிய வரிகளை நீக்கிய பின்னரே, காங்கிரசின் பாடலாக, மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அதை ஏற்றுக் கொண்டார். முஸ்லிம்களை திருப்திபடுத்தவே, துர்காதேவி பற்றிய வரிகளை அவர் நீக்கினார். இதுவே, நாட்டின் பிரிவினைக்கான விதைகளை விதைத்தது. வந்தே மாதரம் பாடல், நாட்டின் தேசிய பாடலாக இருக்க முடியாது என்றும் நேரு ஏளனம் செய்தார். - சி.ஆர்.கேசவன் செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

