புத்த துறவிகளின் 80,000 அந்தரங்க படங்கள் பறிமுதல்
புத்த துறவிகளின் 80,000 அந்தரங்க படங்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 19, 2025 12:56 AM

பாங்காக்: தாய்லாந்தில், புத்த மடாலயங்களின் தலைமை துறவிகள் பலர் இளம்பெண் ஒருவருடன் நெருங்கி பழகிய 80,000 அந்தரங்க படங்கள், வீடியோக்கள் போலீசிஸ் விசாரணையில் சிக்கின. இதனால் தாய்லாந்து மன்னர் மற்றும் பொது மக்கள் புத்த துறவிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.
மிரட்டல்
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் பிரபல புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தலைமை துறவி சமீபத்தில் திடீரென தன் துறவு வாழ்க்கையை கைவிட்டார்.
இது சர்ச்சையான நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்தனர். அதில் துறவியுடன் நெருங்கி பழகிய பெண் ஒருவர், தான் கர்ப்பம்அடைந்ததாகக் கூறி, 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதால் அவர் துறவு வாழ்க்கையை விட்டு வெளியேறியது தெரிந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த பெண் குறித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் பாங்காக்கைச் சேர்ந்த விலாவன் எம்சாட், 35, என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சொகுசு பங்களா
இது குறித்து போலீசார் கூறியதாவது:
பாங்காக் அருகே உள்ள நோன்தாபுரியில், விலாவனின் சொகுசு பங்களா உள்ளது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களில் துறவிகளின் 80,000 அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள் கிடைத்தன.
இவை 2022ல் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் வரை எடுக்கப்பட்டவை. இதில் மடாலயங்களின் ஒன்பது தலைமை துறவிகளும் அடக்கம்.
அதை வைத்து மிரட்டி கடந்த மூன்று ஆண்டுகளில் துறவிகளிடம் 100 கோடி ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக துறவிகளை தொடர்புகொண்டு தன் வலையில் வீழ்த்தி, திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். ஒரு துறவி விலாவனை ஷாப்பிங் அழைத்துச் சென்று 75 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி தந்துள்ளார்.
இந்த பாலியல் மோசடியில் சிக்கிய துறவிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது. பலர் விலாவனுடன் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.
இந்த விவகாரம் தற்போது தாய்லாந்தில் பெரிய பிரச்னையாகி உள்ளது. இதனால் அந்நாட்டு மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் தன் 73வது பிறந்த நாளுக்கு அழைத்திருந்த 80க்கும் மேற்பட்ட துறவிகளுக்கான அழைப்பிதழ்களை ரத்து செய்துள்ளார்.