ADDED : மார் 14, 2024 06:41 AM
புதுடில்லி: நம் ராணுவம் மற்றும் கடலோர காவல் படைக்கு, அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்க, எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கஸ் லிமிடெட் நிறுவனத்துடன், 8,073 கோடி ரூபாய் மதிப்பிலான இரு ஒப்பந்தங்களில் ராணுவ அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இது தொடர்பாக, ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, கடந்த வாரம் இரு கொள்முதல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று, எச்.ஏ.எல்., நிறுவனத்துடன், 34 மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களான, 'துருவ் மார்க் 3' வாங்குவதற்காக, 8,073.17 கோடி ரூபாய்க்கு இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இதில், ராணுவத்துக்கு 25; கடலோர காவல் படைக்கு ஒன்பது ஹெலிகாப்டர்கள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. இந்த ஹெலிகாப்டர், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

