ஓணம் பண்டிகை கேரளாவில் 12 நாட்களில் ரூ.818 கோடி மது விற்பனை
ஓணம் பண்டிகை கேரளாவில் 12 நாட்களில் ரூ.818 கோடி மது விற்பனை
ADDED : செப் 19, 2024 12:58 AM
திருவனந்தபுரம், கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி, கடந்த 12 நாட்களில் மட்டும், இதுவரை இல்லாத வகையில், 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவை மக்கள் கொண்டாடி மகிழ்வர். இந்தாண்டு கடந்த 6ல் துவங்கிய ஓணம் பண்டிகை, 15ல் முடிவடைந்தது.
இந்நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி, கடந்த 6ம் தேதி முதல், 17 வரையிலான 12 நாட்களில் மட்டும், 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது, இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச விற்பனை.
கடந்த ஆண்டு இதே காலத்தில், 809.25 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது.
இந்த தகவலை, கேரள அரசின் 'பெவ்கோ' எனப்படும் கேரள மாநில பானங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்தது.
திருவோணத்துக்கு முந்தைய நாளான உத்திராடம் நாளில் மட்டும், கொல்லம் மாவட்டத்தின் ஆஸ்ரமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில், அதிகபட்சமாக 1.15 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமாக, மது விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வந்த திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடி, இந்தாண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு, உத்திராடம் நாளில் 1.04 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு உத்திராடம் நாளில், 715.97 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 704.06 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த 6 - 17 வரையிலான காலத்தில், 5.59 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து, ஒட்டுமொத்த விற்பனையில், மலப்புரம் மாவட்டத்தின் திரூரில் உள்ள மதுபானக் கடை முதலிடத்தை பிடித்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தின் கருணாகப்பள்ளியில் உள்ள மதுபானக் கடை, 5.14 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மேனம்குளம் கிடங்கின் கீழ் இயங்கும் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மதுபானக் கடை, 5.01 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.