ரூ.50,000த்துக்கு மேல் அபராதம் விதித்த 84 பைக், 1 கார் பறிமுதல்
ரூ.50,000த்துக்கு மேல் அபராதம் விதித்த 84 பைக், 1 கார் பறிமுதல்
ADDED : பிப் 17, 2024 11:17 PM

பெங்களூரு : போக்குவரத்து வீதிகளை மீறியதால், 50,000 ரூபாய்க்கு மேல் அபராதம் செலுத்த வேண்டிய தலா 84 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை பெங்களூரு தெற்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு நகரில், வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
போலீசார் தடுக்க மாட்டார்கள் என கருதி பலரும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மீறுவது செய்வது, சீட் பெல்ட் அணியாதது உட்பட போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர்.
ஆனால், அதிநவீன கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, நகரின் அனைத்து மண்டல டி.சி.பி.,க்களுக்கும் போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் அனுசேத் உத்தரவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக, பெங்களூரு தெற்கு பிரிவு டி.சி.பி., சிவபிரகாஷ் தேவராஜ் கூறியதாவது:
என் தலைமையில் நகரில், கடந்த மூன்று நாட்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம், 50,000 ரூபாய்க்கு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டிய தலா 84 இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
'சிட்டி 100' என்ற இரு சக்கர வாகனத்துக்கு, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்ததுதல், மீண்டும் மீண்டும் விதிமுறைகள் மீறுதல் என விதிமுறை மீறியதாக 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.