ADDED : ஆக 06, 2025 07:55 AM
புதுடில்லி : 'ஆன்லைன்' விளையாட்டுகளில் ஈடுபடும் 84,000க்கும் மேற்பட்ட இந்திய பயனர்களின் கணக்கு விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக பிரபல சர்வதேச இணைய பாதுகாப்பு நிறுவனமான, 'காஸ்பர்ஸ்கை' தெரிவித்துள்ளது.
உலகளவில் ஆன்லைன் விளையாட்டுகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வர்த்தகம் நிகழும் பகுதிகளாக இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளன.
இந்நிலையில், 2024ம் ஆண்டில் மட்டும் ஆன்லைன் விளையாட்டுகளின் பயனர்களில் 1.1 கோடி பேரின் கணக்கு விபரங்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக சர்வதேச இணைய பாதுகாப்பு நிறுவனமான, 'காஸ்பர்ஸ்கை' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது 180 கோடியை எட்டியுள்ளது. இதில் ஈடுபடும் பயனர்களில், 1.1 கோடி பேரின் கணக்கு விபரங்கள் இணையத்தில் ஆண்டுதோறும் கசிகின்றன. இதில், இந்தியாவில் உள்ள பயனர்களில் 84,262 பேரின் கணக்கு விபரங்கள் கசிந்துள்ளன.
அதிகபட்சமாக தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் 1.62 லட்சம் பேரின் கணக்குகள் கசிந்துள்ளன. அடுத்ததாக, பிலிப்பைன்சில் 99,273 பேரின் கணக்குகள், வியட்நாமின் 87,969 பேரின் கணக்குகளும், இந்தோனேஷியாவில் 69,909 பேரின் கணக்குகளின் விபரங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

