துணைவேந்தர் நியமனம் தாமதமானால் நாங்களே நியமிப்போம்: சுப்ரீம் கோர்ட்
துணைவேந்தர் நியமனம் தாமதமானால் நாங்களே நியமிப்போம்: சுப்ரீம் கோர்ட்
ADDED : டிச 06, 2025 02:44 AM

'கேரளாவில், பல்கலைகளுக்கான துணைவேந்தரை நியமிக்கவில்லை என்றால் நாங்களே நியமிப்போம்' என, உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள ஏ.பி.ஜே., அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலையின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள கவர்னர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, “துணைவேந்தருக்கான பெயர்களை பரிந்துரை செய்யும் தேர்வு குழு இரண்டு பெயர்களை வழங்கியது. அதை கவர்னர் ஏற்றுக்கொண்ட போதும், மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது,” என்றார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், கவர்னர் மற்றும் மாநில அரசு ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஒருவேளை நீங்கள் வரவில்லை என்றால், துணைவேந்தரை நாங்களே நியமிக்க நேரிடும்' என்றனர்.
தொடர்ந்து, வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் பெயர் பரிந்துரைகளை வழங்குவதற்காக, நீதிபதி சுதன்சு துலியாவை உச்ச நீதிமன்றம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
- டில்லி சிறப்பு நிருபர் -

