ADDED : அக் 13, 2024 04:15 AM

உடுப்பி : கர்நாடகா மாநிலம் மங்களூரு பஜ்பே விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் துபாய்க்கு விமானம் புறப்பட இருந்தது. இதில் பயணம் செய்த ஒருவரின் பாஸ்போர்ட், விசாவை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் குளறுபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதார் அட்டையை வாங்கி பார்த்தபோது, சிக்கிம் மாநிலத்தின் மாணிக் உசேன் என்று இருந்தது. ஆனால் அவரது பேச்சு, நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நபர், தான் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று ஒப்புக்கொண்டார். அவரது பெயர் மாணிக் உசேன் என்பதும், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று போலி ஆதார் அட்டை தயாரித்ததும் தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின்படி, உடுப்பி மல்பே பஸ் நிலையம் அருகே, ஒரு வீட்டில் வசித்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஹக்கீம் அலி, சுஜோன், இஸ்மாயில், கரீம், சலாம், ரஜகுல், முகமது சோஜிப், உஸ்மான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த, சிக்கிம் மாநிலத்தின் கஜோல் என்பவரும் கைதானார். இவர், வங்கதேச நாட்டினரை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் அழைத்து வந்து, போலி ஆதார் அட்டை தயாரித்து, மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது.
சில வாரங்களுக்கு முன்பு, பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த இரண்டு பாகிஸ்தானியர் குடும்பங்கள் கைது செய்யப்பட்டன. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், இந்தியாவின் பல பகுதிகளில் வசித்த 14 பேரை, பெங்களூரு ஜிகனி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.