பிஎஸ்எப் வரலாற்றில் முதல்முறை: பணியில் சேர்ந்து 5 மாதத்தில் பதவி உயர்வு பெற்ற காவலர்
பிஎஸ்எப் வரலாற்றில் முதல்முறை: பணியில் சேர்ந்து 5 மாதத்தில் பதவி உயர்வு பெற்ற காவலர்
ADDED : அக் 23, 2025 04:24 PM

புதுடில்லி: பிஎஸ்எப் வரலாற்றில் முதல்முறையாக பணியில் சேர்ந்து ஐந்து மாதத்தில் பதவி உயர்வு பெற்றவர் என்ற பெருமை உ.பி.,யை சேர்ந்த பெண்ணுக்கு கிடைத்துள்ளது.
பிஎஸ்எப் எனப்படும் எல்லை பாதுகாப்புப்படை கடந்த 1965 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது 2.65 லட்சம் பேர் பணிபுரியும் இந்த படை, பாகிஸ்தான் எல்லையையும், வங்கதேச எல்லையையும் பாதுகாத்து வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சில பணிகளும் இந்தப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப்படை உருவாக்கப்பட்டதில் இருந்து யாருக்கும் சீக்கிரம் பதவி உயர்வு வழங்கப்பட்டது இல்லை. சில ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்கு பிறகே பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், உ.பி.,யின் தாத்ரி நகரை சேர்ந்த தச்சர் ஒருவரின் மகளான சிவானி என்பவர் பிஎஸ்எப் அமைப்பில் காவலராக கடந்த ஜூன் 1 ம் தேதி பணியில் சேர்ந்தார். தற்போது பஞ்சாபில் செயல்படும் 155வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவர் பிரேசிலில் கடந்த ஆக.,31 முதல் செப்., 8 வரை நடந்த 17 வது உலக வுஷூ ( பாரம்பரிய கலைகள் போட்டி) சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவரின் சிறப்பான திறமையை பாராட்டி தலைமைக் காவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை பிஎஸ்எப் இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, வழங்கி சிவானியை பாராட்டினார். பிஎஸ்எப் வரலாற்றில் இதற்கு முன்னர் இப்படி யாருக்கும் பதவி உயர்வு கிடைத்தது இல்லை. மத்திய பாதுகாப்புப் படைகளிலும் இதே நிலை தான் உள்ளது.
சிவானி கூறுகையில், '' நான் தினமும் 2 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவேன். எனது அடுத்த இலக்கு உலகக்கோப்பை தொடர். இதற்காக கடுமையாக தயாரி வருகிறேன். அதில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன். அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என சக ஊழியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்ததை போல் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவின் ஜியாங்யின்னில் நடந்த சான்டா உலக கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிஎஸ்எப் காவலர் அனுஜ் என்பவருக்கு கடந்த ஜூலை மாதம் தலைமைக் காவலராக பதவி உயர்வு வழங்குவதற்கான உத்தரவை பிஎஸ்எப் இயக்குநர் ஜெனரல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.