கடினமான நேரத்தில் ஆறுதல்: விமான பணிப்பெண் குறித்து நகைச்சுவை நடிகை நெகிழ்ச்சி
கடினமான நேரத்தில் ஆறுதல்: விமான பணிப்பெண் குறித்து நகைச்சுவை நடிகை நெகிழ்ச்சி
ADDED : அக் 23, 2025 03:25 PM

புதுடில்லி: கடினமான நேரத்தில் ஆறுதல் அளித்த விமானப் பணிப்பெண் குறித்து நகைச்சுவை நடிகை அதிதி மிட்டலின் பகிர்வு சமூகவலைதளத்தில் வைரலானது.
அதிதி மிட்டல் நடிகை மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் இந்தியாவில் ஸ்டாண்ட்-அப் காமெடி செய்த முதல் பெண்களில் ஒருவர்.
இந்நிலையில் தனது வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தனக்கு ஆறுதல் அளித்த ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் பிரீத்தி குறித்து மனதை தொட்ட நெகிழ்ச்சியான கதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதிதி மிட்டல் பதிவிட்ட வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
தந்தையின் திடீர் மரணத்திற்குப் பிறகு 2017ல் லண்டனில் இருந்து மும்பைக்கு அவசர விமானத்தில் சென்றபோது, நான் வருத்தமாக இருந்ததை அறிந்த அந்த விமானத்தில் இருந்த பணிப்பெண், ப்ரீத்தி, நான் கேட்காமலேயே எனக்கு வெதுவெதுப்பான தண்ணீர், தேநீர், எலுமிச்சைப் பழம் ஆகியவற்றை வழங்கிக் கொண்டே இருந்தார்.
பின்னர், என்னுடைய வலி, சோகம் குறித்து அறிய ஆர்வமாக இருந்தார். அந்த பணிப்பெண்ணின் செயல், என்னுடைய சோகத்தை பரிந்து கொண்டது ஆறுதலாக இருந்தது. ப்ரீத்தி நீ எங்கிருந்தாலும், உலகின் சிறந்த தீபாவளியை கொண்டாடுவாய் என்று நம்புகிறேன். கடவுள் சத்தியமாக கூறுகிறேன், விமானப் பணிப்பெண்ணின் பணி என்பது விவரிக்கமுடியாத அழுத்தமான பணி. நாம் அவர்களின் பணியை பெருமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலானது.
இது குறித்து நெட்டிசன்கள் கூறியதாவது:
நான் சந்தித்த பெரும்பாலான விமான பணிப்பெண்களை விட ப்ரீத்தி ஒரு சிறந்தவராக இருந்தார், என்று ஒரு பயனர் கூறினார். மற்றொருவர், “ப்ரீத்தி என்பது கன்னடத்தில் காதல் என்று பொருள். நம்பிக்கையற்ற இடத்தில் நீங்கள் உண்மையிலேயே அன்பைக் கண்டீர்கள்” என்றும் கருத்துக்கள் கூறியுள்ளனர்.