குடிசை பகுதிகளை சீரமைக்க 9 பேர் கொண்ட குழு நியமனம்
குடிசை பகுதிகளை சீரமைக்க 9 பேர் கொண்ட குழு நியமனம்
ADDED : ஜூலை 11, 2025 09:25 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில், குடிசைப் பகுதிகளை, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை தாராவி போல மறுசீரமைக்க, டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம், ஒன்பது பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
வாரியத்தின் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் தலைமை பொறியாளர், இயக்குனர், மேற்பார்வை பொறியாளர், நிர்வாக பொறியாளர் மற்றும் இரண்டு இளநிலை பொறியாளர்கள், இரண்டு மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை மாநகரின் தாராவியைப் போலவே, டில்லியிலும் குடிசைப் பகுதிகளை மறுசீரமைப்பது குறித்து இந்தக் குழு விரிவான ஆய்வு நடத்தும்.
அதை செயல்படுத்துவது சாத்தியம் என கண்டறியப்பட்டால் அதற்கான நடைமுறைகள், கட்டமைப்புகள் மற்றும் செயல்படுத்துதல் வழிமுறைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும். அடுத்த, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க இந்தக் குழுவுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை தாராவி மறுசீரமைப்புத் திட்டம், அதானி குழுமம் மற்றும் மஹாராஷ்டிர அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.