ADDED : நவ 03, 2024 11:43 PM
ஹாவேரி ; இடைத்தேர்தல் நடக்கும் ஷிகாவி தொகுதியில், இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு மதுபானம் தாராளமாக கிடைக்கிறது.
ஹாவேரியின், ஷிகாவி சட்டசபை தொகுதிக்கு நவம்பர் 13ல், இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில் பரத் பொம்மை, காங்கிரஸ் வேட்பாளராக யாசிர் அகமதுகான் பதான் போட்டியிடுகிறார். வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, இரண்டு கட்சிகளின் தலைவர்களும் முனைப்பாக உள்ளனர்.
ஷிகாவி, பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டையாகும். பசவராஜ் பொம்மை நான்கு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.,வானவர். தொகுதியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ., முயற்சிக்கிறது. அதே போன்று, தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் காங்கிரஸ், இம்முறை எப்படியாவது தொகுதியை கைப்பற்ற போராடுகின்றனர்.
வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், தங்கள் தலைவர்களின் வெற்றிக்காக, வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு முறை தேர்தலில் செய்வதை போன்று, இரவோடு இரவாக மதுபானம், பணம் வழங்குகின்றனர். இது குறித்து இரண்டு கட்சிகளின் தலைவர்கள், பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றனர்.
யாசிர் அகமதுகான் பதான் கூறியதாவது:
தொகுதியில் எதிரணி போட்டியாளர், பணம், மதுபானம் வழங்கி தேர்தலை நடத்துகின்றனர். இம்முறை அதற்கு நாங்கள் வாய்ப்பளிக்க மாட்டோம்.
மாவட்ட பஞ்சாயத்து தொகுதிக்கு ஒருவர் வீதம், ஒன்பது அமைச்சர்கள் ஷிகாவியில் தங்குவர். பூத் அளவில் கண்காணிப்பர். பணம், மதுபானம் வழங்குவது தெரிந்தால், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
யாசிர் அகமதுகான் பதானுக்கு பதிலடி கொடுத்து, எம்.பி., பசவராஜ் பொம்மை கூறியதாவது:
காங்கிரசில் தான் பெருமளவில், பணம், மதுபானம் அளிக்கப்படுகிறது. பணமும், மதுபானமும் எங்கிருந்து வருகிறது என்பது, எங்களுக்கு தெரியும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும் தொகுதிக்கு வருகின்றனர். இவர்கள் வெறுங்கையோடு வருகின்றனரா?
இவ்வாறு அவர் கூறினார்.