தீபாவளிக்கு தயாரான தரமற்ற இனிப்புகள்; தெலுங்கானாவில் அதிகாரிகள் திடீர் ரெய்டு
தீபாவளிக்கு தயாரான தரமற்ற இனிப்புகள்; தெலுங்கானாவில் அதிகாரிகள் திடீர் ரெய்டு
ADDED : அக் 19, 2025 10:04 AM

ஹைதராபாத்; நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில்,. தெலுங்கானாவில் 95 இனிப்பு மற்றும் பலகாரக்கடைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 100 கிலோ கலப்பட உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாடு முழுவதும் நாளைய தினம் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்ட இருக்கின்றன. இன்றே துணிக்கடைகளிலும், இனிப்பு விற்பனை பலகாரக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
தீபாவளி கொண்டாட்ட மனநிலையில் மக்கள் இருக்க, தெலுங்கானாவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர். இனிப்புகள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள், அவை விற்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் ஆய்வு நடத்தினர்.
மொத்தமுள்ள 33 மாவட்டங்களிலும் உள்ள பலகாரக் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்குள்ள இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தரமானதாக உள்ளதா? உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறமிகள் சேர்க்கப்பட்டதா? என விரிவான சோதனைக்கு உட்படுத்தினர்.
சோதனையின் முடிவில் 95 கடைகளில் ஜிலேபி,லட்டு போன்ற தின்பண்டங்களில் விதிகளை மீறி செயற்கை நிறிமிகள் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட குற்றச்சாட்டில், அங்கிருந்த அனைத்து இனிப்புகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இனிப்புகள் தயாரிப்பில் கலப்பட நெய் கலந்தது, மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்பட்ட கலப்பட எண்ணெய் கொண்டு பதார்த்தங்களை சமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்த 100 கிலோ காலாவதியான மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இனிப்பு பொருட்களை கைப்பற்றி அவற்றை அங்கேயே அழித்தனர்.
சுகாதரமற்ற முறையில் இயங்கிய பலகாரக்கடை உரிமையாளர்களை எச்சரித்த அதிகாரிகள், அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசையும் வினியோகித்தனர்.