ADDED : அக் 18, 2024 07:41 AM

ஹாவேரி: ஹாவேரியில் பெய்த கனமழையால், சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டு 12 வயது சிறுவன் இறந்தார். ஹாவேரி டவுனில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் நகரில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாந்திநகரில் உள்ள எஸ்.பி., அலுவலகம் முன்பும், மழைநீர் வெள்ளம் போல ஓடியது. நேற்று காலை சாந்திநகரில் வசிக்கும் பசவராஜ் என்பவரின் மகன் நிவேதன் குடகேரி, 12 என்பவர், அப்பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மழை வெள்ளத்தில் தவறி விழுந்த நிவேதன், திறந்து கிடந்த சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். சாக்கடை கால்வாயில் இறங்கி நிவேதனை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின், அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
நிவேதன் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். நகராட்சி சார்பில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்வதற்காக, சாக்கடை கால்வாய் மூடியை தனியாக எடுத்து வைத்து இருந்தனர். நேற்று மழை பெய்த போது, மூடியை மூடாமல் விட்டு விட்டனர். இதனால் சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டு நிவேதன் இறந்தது தெரிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போது, சாந்திநகர் பகுதியில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக நடக்கிறது. இதனால் கோபம் அடைந்த மக்கள் மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் விஜய் மகாந்தேஷ் தம்மண்ணவர், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சு நடத்தினார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.