ADDED : செப் 26, 2024 10:51 PM
நரேலா: குடிபோதையில் அண்ணனின் 4 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்ற கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
டில்லியில் வசிக்கும் 35 வயதான கூலித்தொழிலாளிக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர், தன் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 22ம் தேதி வழக்கம்போல் தன் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அத்துடன் அவரை அவரது தாய் வீட்டுக்குச் செல்லும்படி வெளியேற்றியுள்ளார்.
தொழிற்சாலையில் வேலை செய்யும் இளம்பெண், தாய் வீட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டார். உள்ளூரிலேயே தனியே இருக்கும் மாமனார் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார்.
அங்கு கணவரின் சகோதரர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மறுநாள் வழக்கம்போல் குடித்துவிட்டு, மனைவியை சமாதானம் செய்ய கூலித்தொழிலாளி வந்து அழைத்துள்ளார்.
கணவருடன் செல்ல மனைவி மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த கூலித்தொழிலாளி, தன் அண்ணனின் 4 வயது பெண் குழந்தையை கடத்திச் செல்லப்போவதாக மிரட்டினார்.
போதையில் உளறுவதாக குடும்பத்தினர் கருதினர். சிறிது நேரத்தில் குழந்தையும் கூலித்தொழிலாளியும் மாயமானார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
நரேலா அருகே உள்ள காட்டில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பலாத்காரம் செய்து அவள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளோம்.