'டார்கெட்'டை அடைவதற்காக மோசடி வகையாக சிக்கிய வங்கி மேலாளர்
'டார்கெட்'டை அடைவதற்காக மோசடி வகையாக சிக்கிய வங்கி மேலாளர்
UPDATED : பிப் 15, 2024 07:44 AM
ADDED : பிப் 15, 2024 02:14 AM

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், 'ஐ.சி.ஐ.சி.ஐ.,' வங்கி கிளை ஒன்றின் மேலாளர் தன் உதவியாளர்களுடன் இணைந்து, 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. கிளைக்கான இலக்கை எட்டுவதற்காக இத்தகைய மோசடி வேலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள தாரியாவாட் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிளையைச் சேர்ந்த மேலாளர், தன் வங்கியில் டிபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்து, வங்கிக்கான செயல்திறன் இலக்குகளுக்காக பயன்படுத்தி வந்தது, போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மிரட்டல்
வங்கிக்கான இலக்கை எட்டும் வகையில், வாடிக்கையாளர்களின் பணத்தை, அவர்களுக்கு தெரியாமல் எடுத்து, புதிதாக சேமிப்பு வங்கி கணக்கு துவங்குவது; பிக்ஸட் டிபாசிட் கணக்குகளை துவங்குவது போன்ற வற்றுக்கு பயன்படுத்தி உள்ளனர். இலக்கை எட்டியதும் பணத்தை அவற்றி லிருந்து எடுத்து உரிய வாடிக்கையாளர் கணக்குக்கு மாற்றி உள்ளனர்.
வாடிக்கையாளர்களுடைய கவனத்துக்கு வராமலே இதை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதற்காக வாடிக்கையாளரின் போன் நம்பர்களையும் மாற்றி உள்ளனர்.
இதனால் இவர்களுக்கு பண லாபம் இல்லை எனினும், டார்கெட் பிரச்னையை எளிதாக சமாளித்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில், உதய்பூரை சேர்ந்த ஒருவருக்கு இந்த தகிடுதத்தம் தெரிய வரவும், அவர் வங்கி மேலாளர் மற்றும் அவரது குழுவினரை மிரட்டி தொடர்ந்து பணம் பறித்து வந்திருக்கிறார்.
அதே வங்கியைச் சேர்ந்த ஊழியர் ஒருவரின் நண்பர், தன் வங்கி கணக்கில் டிபாசிட் செய்த பணத்தில் வேறுபாடுகள் இருந்தது குறித்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரின் கணக்கை ஆய்வு செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பது வங்கி ஊழியருக்கு தெரியவந்தது.
பறிமுதல்
இதையடுத்து, பிரதாப்கர் மாவட்ட போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த மோசடி பல ஆண்டுகளாக நடந்து வருவது கண்டறியப்பட்டது.
மோசடி குறித்து பிரதாப்கர் மாவட்ட எஸ்.பி., கூறியதாவது:
இதுவரை மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 62 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 46 லட்சம் ரூபாய் ரொக்கமும் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வங்கி அதிகாரிகளை மிரட்டி வந்த உதய்பூரைச் சேர்ந்த நபர், மிரட்டி வாங்கிய பணத்தில் வாங்கப்பட்ட பண்ணை வீடும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த நபர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பண மோசடி குறித்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினார்.

