பிரதமர் மோடி அழகானவர், சாதனையாளர்: சர்வதேச மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்
பிரதமர் மோடி அழகானவர், சாதனையாளர்: சர்வதேச மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்
ADDED : அக் 29, 2025 12:54 PM

கியோங்ஜூ(தென் கொரியா): ''இந்திய பிரதமர் மோடி நல்ல அழகான தோற்றமுள்ளவர், சாதனையாளர். அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் எனக்கு உண்டு,'' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
தென்கொரியாவில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்க தென்கொரியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கியாங்ஜூ நகரம் சென்ற அவர் மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உலகளாவிய வர்த்தக தலைவர்கள் திரண்டிருந்தனர்.
டிரம்ப் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவர்கள் அனைவரும் எழுந்து நின்று, கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். நிகழ்ச்சியில் பின்னர் டிரம்ப் பேசியதாவது;
இந்தியாவுடன் நான் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறேன். பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளது. எங்கள் இருவர் இடையேயும் சிறந்த உறவு இருக்கிறது.
அதேபோல பாகிஸ்தான் பிரதமரும் ஒரு சிறந்த மனிதர். அவர்களுக்குள் ஒரு பீல்டு மார்ஷல் இருக்கிறார். அவர் சிறந்த போராளி என்பதால் அப்படி அழைக்கப்படுகிறார். அவர்கள் அனைவரையும் நான் அறிவேன்.
பிரதமர் மோடியை அழைத்து உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என்றேன். இல்லை... இல்லை நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். நான் இல்லை, முடியாது என்றேன். நீங்கள் பாகிஸ்தானுடன் சண்டையிடுகிறீர்கள். எனவே என்னால் முடியாது என்றேன்.
அதன்பின்னர் பாக்.கை நான் அழைத்தேன். நீங்கள் (பாகிஸ்தான்) இந்தியாவுடன் சண்டை போடுகிறீர்கள், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்ய முடியாது என்று கூறினேன். உடனே அவர்கள், 'இல்லை, முடியாது, எங்களை(இந்தியா, பாக்) சண்டையிட அனுமதிக்க வேண்டும்' என்று என்னிடம் கூறினர். அதற்கு நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.
பிரதமர் மோடி மிகவும் அழகான மனிதர். ஒரு சாதனையாளர், கடினமானவர். இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் போனில் அழைத்து, 'நாங்கள் புரிந்து கொண்டோம்' என்றனர், சண்டையையும் நிறுத்திவிட்டனர். இது எப்படி இருக்கிறது? ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது.
பைடன் இப்படி (டிரம்ப் போர் நிறுத்தம் கோரி எடுத்த முயற்சிகள் போல) செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? அப்படி இருக்காது என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு டிரம்ப் பேசினார்.

