ADDED : டிச 20, 2024 05:29 AM
யாத்கிர்: யாத்கிர் மாவட்டம், ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பசவராஜ் - மாலம்மா தம்பதி. இவர்களின் மகன் ஜெகதீஷ், 6. நேற்று முன்தினம் பண்ணைக்கு சென்றுள்ளார். வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென அழுதார்.
இதை கவனித்த பெற்றோர், மகனிடம் கேட்ட போது, தேள் கொட்டியதை தெரிவித்தார். உடனடியாக, மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, யாத்கிர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மகன் ஆரோக்கியமாக இருந்ததால், ராய்ச்சூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பெற்றோர் முடிவு செய்தனர்.
ஆனால், அங்கிருந்த மருத்துவர், 'எங்கள் மருத்துவமனையில் தேள் கடிக்கான அனைத்து மருந்துகளும் உள்ளன. இங்கேயே சிகிச்சை அளிக்கிறோம்' என கூறியுள்ளார். இதை நம்பி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும்போதே, சிறுவன் இறந்து விட்டான்.
போராட்டம் நடத்திய சிறுவனின் குடும்பத்தினர் கூறுகையில், 'சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதால், ராய்ச்சூருக்கு அழைத்து செல்கிறோம் என்றோம். ஆனால், மருத்துவர்களோ, சிறுவனை டிஸ்சார்ஜ் செய்யவில்லை. ஆனால் உரிய சிகிச்சை அளிக்காததாலும், மருத்துவரின் அலட்சியத்தாலும் தான் சிறுவன் இறந்ததான்' என்றனர்.
தகவல் அறிந்த யாத்கிர் நகர் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்தனர்.