ADDED : டிச 31, 2024 05:34 AM

இந்திய வரலாற்றில் கி.மு., 6ம் நுாற்றாண்டு முக்கியத்துவம் வாய்ந்த காலம். அப்போது தான், மனித நாகரிகத்தின் முன்னேற்றம் ஆரம்பமானது.
இக்காலத்தில் கவுதம புத்தர் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. வேத காலம் முதற்கொண்டு, வழி வழியாக பின்பற்றி வந்த மக்கள் வாழ்வு முறையை மாற்றி அமைத்த புத்த மதமும், சமணமும் தோன்றுவதற்கான பல விளக்கங்களை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
புத்த தர்மம் அன்பை போதித்து, அறியாமையை எதிர்த்து, அறிவை உபதேசித்தது. பிறப்பால் அமைந்தது என சொல்லப்படும் உயர்வு தாழ்வை நீக்கி, பிரிவினைகளை உடைத்தெறிந்தது.
மனிதர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வழிகளான உண்மை உரைத்தல், மனத்துாய்மை, இரக்கம், ஆசையை அகற்றுதல், அன்பு, பரிவு, சமத்துவம், அகிம்சை ஆகிய நற்பண்புகளை புத்த மதம் வலியுறுத்தியது.
புத்த மதத்தில் ஜாதி பிரிவு கிடையாது. அனைத்து மனிதர்களும் சமமானவர்களே என திகழ்ந்தது. மிருகங்கள் பலியிடுதல், சடங்கு இவைகளுக்கு எதிராக இவருடைய தத்துவங்கள் விளங்கின.
புத்தர் கோட்பாடுகள்:
புத்தம் சரணம் கச்சாமி -- -புத்த பெருமானை சரணம் அடைகிறேன்.
தம்மம் சரணம் கச்சாமி - புத்தர் தர்மத்தை சரணம் அடைகிறேன்.
சங்கம் சரணம் கச்சாமி -- புத்தர் சங்கத்தை சரணம் அடைகிறேன்.
இவைகளை திரி சரணம் என அழைக்கின்றனர்.
பஞ்ச சீலம்
எந்த உயிரையும் கொல்லாமலும்,
தீங்கு செய்யாமலும் இருத்தல்.
பிறர் பொருளைக் களவாடாது இருத்தல்.
முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
மது வகைகளை உண்ணாது இருத்தல்.
பொய் பேசாது இருத்தல்.
இப்போதனைகளை வளர்க்க சென்னை ராயப்பேட்டையில் 1898ல் சாக்கிய புத்த சங்கத்தை அயோத்தி தாசர் பண்டிதர் நிறுவினார். இவர், பல்வேறு நுால்களை எழுதினார். 'தமிழன்' என்ற பத்திரிகையை நடத்தினார். புத்தர் அருளறம் போதிக்க கோலார் தங்கவயலுக்கு வந்தார்.
மாரிகுப்பம் பகுதியில், சைவ சித்தாந்த வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டு வந்த முருகேசர் என்பவர் நடத்தி வந்த, 'சிவகேசவ அத்வைத சபை' என்ற ஆன்மிக அமைப்பை அறிந்தார். அவரின் தொடர்புடன் 1907ல் சாக்கிய புத்த சங்கம் என்ற அமைப்பை, மாரிகுப்பம் ஹன்காக் வட்டத்தில் ஏற்படுத்தினார். இதுவே, புத்தர் கோவிலாக மாறி பூஜிக்கப்படுகிறது.
இலங்கை, மியான்மர், திபெத், நேபாளம், தாய்லாந்தை சேர்ந்த புத்த பிக்குகளை வரவழைத்து புத்தரின் சித்தாந்த வழிபாடு முறைகளை கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பஞ்ச சீல உபதேசம் செய்து, பவுத்தம் தழைக்க செய்தனர்.
தமிழர்கள் நிறைந்திருந்ததால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து புத்த மத வழிபாடுகளை விளக்கினர்; சொற்பொழிவுகளை நடத்தினர். இது அறநெறி பாதையின் அடிச்சுவடு என்பதை விளக்கியதுடன் ஒழுக்கத்தை கற்பித்தனர். இதில் பண்டிதமணி அப்பாதுரையார், அய்யாக்கண்ணு புலவர் ஆகியோர் சிறந்து விளங்கினர்.
மத கோட்பாடுடன் கல்வியறிவின் அவசியத்தை அறிந்து, 1907ம் ஆண்டு நவம்பர் 18ல் 'புத்திஸ்ட்' எனும் தமிழ்ப் பள்ளியையும் ஆரம்பித்தனர். 1 முதல் 7 வரை வகுப்புகள் நடத்தப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு முன், மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்டது. அய்யாக்கண்ணு புலவர், தமிழாசிரியராக இருந்து புத்திஸ்ட் பள்ளியில் தமிழ் இலக்கணம், இலக்கியத்தை மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தந்தார். இதன் மூலம் புத்த மதத்தின் நோக்கங்கள், மனித நேயம், அன்பின் பலன் பற்றி அறிய வைத்தார்.
தாய்லாந்து நாட்டில் இருந்து, வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட புத்தர் சிலை கொண்டு வரப்பட்டு இங்கு அமைத்துள்ளனர். மன நிறைவை தரும் தியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மாலையில் தியான நிகழ்ச்சிகள், திரி சரணம், பஞ்ச சீலம் ஓதுதலும்; மாதந்தோறும் புத்த பவுர்ணமி விசேஷ வழிபாடு, 'அன்பே இறைவன்' என்ற வழிபாடும் நடந்து வருகிறது.