ADDED : நவ 12, 2024 05:56 AM
பெங்களூரு: ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், மது அருந்திவிட்டும், இரு சக்கர வாகனம் ஓட்டியவர் மீது, பெங்களூருவில் முதன் முறையாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓட்டுனர் உரிமம் இல்லாமல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, குமாரசாமி லே-அவுட்டில், ஒரு வாலிபர் ஓட்டுனர் உரிமம் இன்றி, மது போதையில் வாகனம் ஓட்டி வந்தார். அவரை மடக்கிப் பிடித்த குமாரசாமி லே-அவுட் போலீசார், கிரிமினல் வழக்குப் பதிவு செய்தனர்.
பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கிரிமினல் வழக்குப் பதிவு செய்வது, இதுவே முதன் முறையாகும்.
பெங்களூரில், கடந்த வாரம் இரவு நேரத்தில், போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர் எம்.என்.அனுசேத் தலைமையில் நடந்த சோதனையில், 53 ஆயிரம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.
அப்போது, 294 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கு போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும், கடந்த 10 மாதங்களில், மது போதையில் பள்ளி வாகனங்களை ஓட்டியதாக 118 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.